'வெளிநாட்டிலிருந்து வந்துள்ளோம்" : ஹோட்டல் ஊழியர்களிடம் கூறிய செவ்வந்தி



கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாளான 18 ஆம் திகதி கடுவெலயில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக வந்ததைக் காட்டும் புகைப்படங்கள், மற்றும் சிசிரிவி காணொளிகள் தற்போது வெளியாகி உள்ளன.

கொலை நடந்ததற்கு முந்தைய நாள்  மாலையில் அவர்கள் காரில் ஹோட்டலுக்கு வந்ததாகவும், அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாகவும், மறுநாள் மஹரகம பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்திடம் கூறியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே இரவில், மற்றொரு காரில் வந்த ஒருவர் ஹோட்டல் முன் வந்து செவ்வந்தியிடம் ஒரு பையைக் கொடுத்ததாகவும், இதில், துப்பாக்கி அடங்கிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் குறித்த புத்தகம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் உத்தியோகபூர்வ அறையில் தொடர்புடைய அறிக்கையை, விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு சமர்ப்பித்துள்ளது.

இதற்கமைய பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அறிக்கைக்கு அமைவாக, நீதிமன்றம் பொலிஸாருக்கு பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை மினுவாங்கொடை  பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான பெண் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை கணேமுல்ல சஞ்சீவ கொலையை திட்டமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மே என்பவரின் நெருங்கிய ஒருவர் மீதே மினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

மினுவாங்கொடை - பத்தடுவன சந்தியில் முச்சக்கர வண்டி நிறுத்தும் இடத்தில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், 36 வயதான லஹிரு ரந்தீர் காஞ்சன என்ற முச்சக்கர வண்டி சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரமையாளரான பெண்ணும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.